சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மக்கள் காவலன்’. ஊழல் நிறைந்த அமைப்புக்கு எதிராகப் போராட வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையை இப்படம் பேசுகிறது. கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அவனுக்கு, அமைப்பிடம் சரணடைவதா அல்லது அதை எதிர்த்துப் போராடுவதா என்ற இரு வழிகளே எஞ்சுகின்றன். பின்னர் என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதைக்களம்.
இப்படத்தில் கே. மணிகண்டன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி மற்றும் ரகு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
பிரதீபன் செல்வரத்தினம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு அருள் மோசஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். ‘பைசன் காளமாடன்’ படத்தைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியில் உருவாகும் ‘மக்கள் காவலன்’ படத்திற்கும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.இப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியாகியுள்ளது. யோகி பி, நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து பாடியுள்ள இப்பாடலுக்கு எம்.கே. பாலாஜி வரிகள் எழுதியுள்ளார். பாடல் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
