மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த திவ்யபாரதி, ‘பேச்சுலர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அவர், தொடர்ந்து ‘கிங்ஸ்டன்’, ‘மதில் மேல் காதல்’, ‘ஆசை’, ‘லிங்கம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்து வரும் அவர், தற்போது மூன்று புதிய படங்களில் பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் பதிவுகளைப் பகிர்ந்து வரும் திவ்யபாரதி, தனது நீளமான கூந்தல் மற்றும் ஸ்டைலான தோற்றம் மூலம் தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவர் நடித்துள்ள தெலுங்குப் படமான ‘கோட்’ நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பேசிய திவ்யபாரதி, படத்தைப் பாதியிலேயே கைவிடும் முயற்சிகள் நடைபெற்றதாகவும், தயாரிப்பாளர் பல சவால்களைக் கடந்து படத்தை நிறைவு செய்ததாகவும் தெரிவித்தார். படத்தைக் கைவிட வேண்டாம் எனத் தயாரிப்பாளரிடம் தான் கெஞ்சியதையும் நினைவுகூர்ந்தார்.
படத்திற்காக எதிர்கொண்ட சிரமங்களை நினைத்துப் பேசியபோது உணர்ச்சிவசப்பட்ட அவர், மேடையிலேயே கண்ணீர் விட்டார். “இந்தப் படத்திற்காக எதிர்கொண்ட சவால்களை நினைத்து அழக்கூடாது என்று நினைத்தேன். ஆனால், என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் என்னை மன்னித்துவிடுங்கள்” என்றும் கேட்டுக்கொண்டார்.இதற்கு முன்பு ‘பேச்சுலர்’ பட விழாவிலும், இரவு நேரப் படப்பிடிப்புகளின்போது தனக்காகத் தனது தாயார் கேரவனிலேயே விழித்திருந்து காத்திருந்ததை நினைவுகூர்ந்து திவ்யபாரதி மேடையில் கண்ணீர் விட்டிருந்தார்.
