இயக்குனர் பாக்யராஜ் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனுடன் சேர்த்து, அவர் சினிமா துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையும் விழாவாக கொண்டாடி வருகிறார். இந்த சந்தர்ப்பத்தில் அவர் அளித்த பேட்டியில், “கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வந்தேன். தற்போது மீண்டும் திரைப்படங்களும், வெப் சீரியஸ்களும் இயக்கும் பணிகளில் ஈடுபட உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த பேட்டியில் கூறுகையில், “சினிமாவுக்குள் வருவதற்கு ஆரம்பத்தில் நண்பர்கள் உதவி செய்தார்கள். அதன் பின்னர் பாரதிராஜா அவர்களுடன் இணைந்தேன். ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் என் பெயர் இடம்பெற்றது. அந்த படத்தின் வெற்றி பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த மாற்றத்தை அனுபவித்தவர்களில் நானும் ஒருவன். சமீபத்தில் கமல்ஹாசனுடன் பேசும் போது கூட அவர் இதை நினைவூட்டினார். ஆரம்ப காலத்தில் நான் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அதன் பின்னர் திரைக்கதை எழுத்தாளராக வளர்ந்தேன். அதற்கு பிறகு ஹீரோவாகவும், பின்னர் இயக்குனராகவும் மாறினேன்.
‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தில் தற்செயலாக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன். அதைக் கண்ட என் அம்மா, ‘நீ ஏன் ஹீரோ ஆகக்கூடாது?’ என்று கேட்டார். அதற்கு ஹீரோ ஆக தனி திறமை தேவை என்று நான் சொன்னேன். அப்போது அவர், ‘நீ ஹீரோ ஆகுவாய், உன் இயக்குனரே உன்னை நடிக்க வைப்பார்’ என்று கூறினார். அவர் சொன்னது போலவே ‘புதிய வார்ப்புகள்’ திரைப்படத்தில் அது நடந்தது. நான் உதவி இயக்குனராக இருந்த காலத்தில், எனக்கு பிறகு என் பெயரை காப்பாற்றும் வகையில் பாக்யராஜ் வருவார் என்று இயக்குனர் பாரதிராஜா கூறியதாகவும் நினைவுகூர்ந்தார்,” என்று பாக்யராஜ் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
