நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. புராணக் கற்பனை மற்றும் அறிவியல் புனைகதை கலந்த கதைக்களத்தில் உருவான இந்த படம், உலகளவில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது. குறிப்பாக, இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் நாக் அஸ்வின் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். அந்த முதல் கட்ட படப்பிடிப்பில், கமல்ஹாசன் தொடர்பான காட்சிகள் முதற்கட்டமாக படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தில் நடித்து வரும் பிரபாஸ், விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசனுடன் இணைவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, பிரபாஸ் மற்றும் கமல்ஹாசன் இருவரும் நேருக்கு நேர் மோதும் அதிரடி காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
