‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ஜீவா. இதனைத் தொடர்ந்து ‘சிவா மனசுல சக்தி’, ‘கற்றது தமிழ்’, ‘கொரில்லா’, ‘ரவுத்திரம்’, ‘கலகலப்பு 2’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த அவர், தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார். சமீபத்தில் ஜீவா நடித்த ‘பிளாக்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த படத்திற்குப் பிறகு, ‘பேலிமி’ படத்தை இயக்கிய இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற திரைப்படத்தில் ஜீவா தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் ஜீவாவுடன் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ராவண கோட்டம்’ படத்தை தயாரித்த கண்ணன் ரவி இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், ‘பிளாக்’ படத்தின் இயக்குநர் பாலசுப்ரமணி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் ஜீவா நடித்து வருகிறார்.
ஜீவாவின் 47வது திரைப்படம் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகிறது. ராஜேஷ் இயக்கிய ‘சிவா மனசுல சக்தி’ திரைப்படம் ஜீவாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பின்னர், ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ திரைப்படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜீவா – ராஜேஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த புதிய படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், கலகலப்பான புரோமோ வீடியோ ஒன்றின் மூலம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என்ற திரைப்படத்தின் தலைப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த புரோமோவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் நடிகர் ஜீவாவும், இயக்குநர் ராஜேஷும் பேசும் உரையாடல்கள் பார்வையாளர்களை சிரிக்க வைப்பதாக அமைந்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
