‘மூன் வாக்’ படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!

“மூன்வாக்” திரைப்படக் குழுவினருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ரசிகர்கள், “மூன்வாக்” திரைப்படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருவதால் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்த கொண்டாட்டங்களை வரவேற்று வருகின்றனர். சினிமா வரலாற்றில் முதன்முறையாக, இசை மாமேதை ஏ.ஆர்.ரஹ்மான், “மூன்வாக்” திரைப்பட ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் தானே பாடியிருப்பதுடன், இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி உள்ளார். இந்த அறிவிப்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஆவலையும் உருவாக்கியுள்ளது.

நேற்று (ஜனவரி 4) நடைபெற்ற “மூன்வாக்” திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாபெரும் ஆடியோ வெளியீட்டு விழா, அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு இசை இரவாக மாறியது. அந்த மாலை முழுவதும் இசையும் நடனமும் நிறைந்ததாக அமைந்தது. விழாவில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா ஆகியோரின் அசத்தலான நேரடி நிகழ்ச்சிகளுடன், பல்வேறு நடன மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் இடம்பெற்று, திரண்டிருந்த ரசிகர் கூட்டத்தை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.

இயக்குநர் மனோஜ் NS பேசுகையில், இந்த திரைப்படத்தை உண்மையிலேயே நினைவில் நிலைத்திருக்கும் படமாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும், “மூன்வாக்” திரைப்படம் திரையரங்குகளில் பார்வையாளர்களுக்கு பேரானந்தமும் மகிழ்ச்சியும் அளிக்கும் என்ற தனது நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார். மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக தோன்றிய தருணத்தில், ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தை எட்டியது. உடனடியாக அவர், “மூன்வாக்” திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து பாடல்களையும் தொடர்ச்சியாக நேரடியாகப் பாடி, ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். இதன் மூலம் அந்த மாலை உண்மையான ஒரு இசைக் கொண்டாட்டமாக மாறியது.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா, எப்போதும் போல அதீத ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களுக்கும் நடனமாடி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அர்ப்பணணையாக பிரமாண்டமான 10 நிமிட நடன அஞ்சலியை வழங்கினார். பிரபுதேவாவின் ஆர்வம், துல்லியமான அசைவுகள் மற்றும் ஒப்பற்ற ஆற்றல், காலம் அவரின் நடன மேஜிக்கைக் குறைக்கவில்லை என்பதை மீண்டும் நிரூபித்ததுடன், ரசிகர்களை இன்னும் இன்னும் அவரது நடனத்தை காணும் ஆவலுக்கு தூண்டியது.அவர் தனது இணை நடிகர்களான யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ் மற்றும் நடன இயக்குநர் சேகர் ஆகியோருடன் இணைந்து மேடையில் நடனமாடி, அந்த இரவினை மேலும் கலகலப்பாகவும் உற்சாகமாகவும் மாற்றினார்.

நடிகர் யோகி பாபு பேசுகையில், இந்த திரைப்படத்தில் தான் 16 விதமான வேடங்களில் நடித்துள்ளதாக கூறினார். மேலும், இது கதையை முன்னெடுத்து செல்லும் முக்கியமான கதாபாத்திரம் என்றும், இதுவரை வெளியிடப்பட்ட மூன்று தோற்றங்களே ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். வரவிருக்கும் நாட்களில் இன்னும் பல வேடங்கள் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். நடிகர்கள் அஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன், தங்களின் சரளமான தமிழ் பேச்சுகளால் பார்வையாளர்களை கவர்ந்தனர். பிரபுதேவா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து நடித்த இந்த சிறப்பு திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக அர்ஜுன் அசோகனின் “மூன்வாக்” நடன அசைவுக்கு பார்வையாளர்களிடமிருந்து சிறப்பு கைதட்டல் கிடைத்தது.

நடிகர்கள் சாட்ஸ், நிஷ்மா, சுஷ்மிதா, தீபா அக்கா, டாக்டர் ஜேக்கப் மற்றும் ராம்குமார் உள்ளிட்டோரும், இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை மேடையில் பகிர்ந்து கொண்டு, தங்களுக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த விழாவில் நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட பல முக்கிய திரை பிரபலங்கள் கலந்துகொண்டு, “மூன்வாக்” திரைப்படத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும், சிவமணி, பாபா பாஸ்கர், சான்வீ மேக்னா, உத்தரா உன்னிகிருஷ்ணன், பார்வதி மீனாட்சி, V Unbeatables, KTV சேத்ரி, பாபா ஜாக்சன், KMJ சிம்சன், J.R. பிரபுதேவா சக்ரி, நோபல் மாஸ்டர், ஜானி மாஸ்டர், அசோக் ராஜா மாஸ்டர் மற்றும் ஸ்ரீதர் மாஸ்டர் ஆகியோரின் பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் விழாவிற்கு பெரும் கலைச்சுவையையும் மகிழ்ச்சியையும் சேர்த்தன.

விழாவின் இறுதியில், பிரபுதேவா மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மானை மேடைக்கு அழைத்து, புகழ்பெற்ற “முக்காலா” பாடலுக்கு அவரை நடனமாட வைத்தார். அதன் பின்னர், “மூன்வாக்” திரைப்படத்தின் முழு குழுவினரும், 10,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களும் இணைந்து, ஏ.ஆர்.ரஹ்மானின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பிரம்மாண்டமான கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. “மூன்வாக்” திரைப்படத்தின் ஐந்து பாடல்களையும் நேரடியாக அனுபவித்த ரசிகர்கள் பேரானந்தத்தில் திளைத்தனர். இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பாடல்கள் வரவிருக்கும் நாட்களில் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியிடப்பட உள்ளன. விளம்பர பணிகள் முழு வேகத்தில் தொடங்கவுள்ள நிலையில், “மூன்வாக்” திரைப்படம் 2026 மே மாதத்தில் பிரம்மாண்ட திரையரங்க வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading