நடிகரும் இயக்குநருமான அபிஷன் ஜீவிந்த் – கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவ ராஜ்குமாருடன் நடித்து வந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார். ‘டூரிஸ் ஃபேமலி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் நடிகராகவும் திரையுலகில் அறிமுகமான அபிஷன் ஜீவிந், தொடர்ந்து ‘வித் லவ்’ படத்தின் மூலம் கதாநாயகனாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
டிராமா கம்பெனி தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சிவ ராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந் ஆகியோருடன் ஷிவானி நாகராம், யோகலட்சுமி, கானா வினோத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு தற்போது அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பு நிறைவு குறித்து டிராமா கம்பெனி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சிவ ராஜ்குமார் மற்றும் அபிஷன் ஜீவிந் இணைந்து பல அற்புதமான தருணங்களை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், டிராமா கம்பெனி தயாரிக்கும் முதல் திரைப்படம் இதுவாகும் என்றும் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சி, சகோதரத்துவம், காதல், சிரிப்பு மற்றும் இடைவிடாத உழைப்பு என பல்வேறு நினைவுகளை உள்ளடக்கியதாக இந்தப் பயணம் அமைந்துள்ளதாகவும், விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை போஸ்டர் அறிவிக்கப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
