மித்ரா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில், எம்.எஸ். மூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 99/66 ஆகும். இந்த படத்தில் சபரி மற்றும் ரோகித் இருவரும் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ரச்சிதா மகாலட்சுமி மற்றும் ஸ்வேதா ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.

இதில் பவன்கிருஷ்ணா, கே.ஆர்.விஜயா, கே.எஸ்.வெங்கடேஷ், எஸ்.சினேகா, குமாரி கனிஷ்கா, ஸ்ரீலேகா, சிங்கம் புலி, புஜ்ஜிபாபு, சாம்ஸ், அம்பானி சங்கர், முல்லை, கோதண்டம், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலரும் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி பேசுகையில், படப்பிடிப்பு நேரத்தில் இந்த படம் ஒரு சின்ன படமாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் இப்போது நடைபெறும் இந்த விழாவின் பிரம்மாண்டத்தை பார்த்தால், இது மிகப் பெரிய படமாகவே தோன்றுகிறது. புத்தர் குறித்து இப்படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் கண்டிப்பாக பெரிதாக பேசப்படும். என் சினிமா பயணத்தில் சம்பள பாக்கி, சம்பளம் தராமல் ஏமாற்றுவது போன்ற பல பிரச்னைகளை நான் சந்தித்திருக்கிறேன். அதுபோன்ற அனுபவம் இந்த படத்திலும் எனக்கு ஏற்படும் என நினைத்தேன். ஆனால் இந்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பிலேயே எனது முழு சம்பளத்தையும் வழங்கிவிட்டார்கள். இதுபோன்று எனக்கு இதுவரை யாரும் வழங்கவில்லை. அனைவரும் மிக அன்பாக பார்த்துக் கொண்டார்கள் என்று கூறினார்.
மேலும் அவர், இந்த படத்தில் நான் பேய் வேடத்தில் நடித்துள்ளேன். ஆனால் நான் சாதாரண பெண் தான். அவ்வப்போது மட்டும் பேய் பிடித்தது போல தோன்றும். கோபம் வரும் நேரத்தில் அந்த பேயும் வெளிப்படும். அது நடிப்பு போல தெரியாது, இயல்பாக இருக்கும். ரசிகர்களுக்கு அது ஒரு கொண்டாட்டமான அனுபவமாக இருக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.
