நடிகர் அஜித்தின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை பதிவு செய்யும் வகையில் ‘கிளாடியேட்டர்ஸ் – இன் பர்சூட் ஆப் சேலஞ்சஸ்’ என்ற ஆவணப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற Asian Le Mans, 24H Series உள்ளிட்ட முக்கிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டிகளில் அஜித் பங்கேற்ற காட்சிகள் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன. ரேசிங் களத்தில் அவர் சந்தித்த சவால்கள், பின்னடைவுகள் மற்றும் கடினமான தருணங்களும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 2025 துபாய் 24H போட்டியில் அஜித் போடியம் வென்ற தருணம் வரை அவரது சர்வதேச ரேசிங் பயணம் இதில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னணி பார்முலா-1 வீரர் நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல், ஜூலியன் கெர்பி உள்ளிட்ட ரேசிங் உலக பிரபலங்களும் இந்த ஆவணப்படத்தில் தோன்றுகின்றனர்.இந்த ஆவணப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘கிளாடியேட்டர்ஸ்’ டிரெய்லரின் சென்சார் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த டிரெய்லரின் ரன்னிங் டைம் 3 நிமிடங்கள் 49 விநாடிகள் என கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
