இயக்குனர் பாரதிராஜா சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஒரு வாரமாக உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் பரவுகின்றன. குறிப்பாக, சோஷியல் மீடியாவில் பல விரும்பதகாத செய்திகள் தொடர்ந்து பரப்படுகின்றன. அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் அறிக்கை விடப்பட்டது. ஆனாலும், அந்த செய்திகள் தொடர்ந்தன.

இந்நிலையில், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் திரையுலகினர் இன்று காலை பாரதிராஜா அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். பின்னர், ஆர். கே செல்வமணி பேசுகையில் இயக்குனர் பாரதிராஜா குறித்து சில நாட்களாக தவறான தகவல் வருகிறது. இன்று நாங்கள் அவரை சந்திக்க வந்தோம். அவர் ஐசியூவில் இருக்கிறார். அவருக்கு தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் உறுப்புகள் நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாங்கள் அவரை சந்திக்க முடியவில்லை. நேற்று அவரை குடும்பத்தினர் சந்தித்துள்ளனர்.
நாங்கள் டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தோம். அவர் மீது அக்கறை உள்ளவர்கள் அவர் நலம் பெற பிரார்த்தனை செய்யுங்கள். அவர் உடல்நிலை குறித்து மருத்துவமனை சொல்வதை மட்டும் நம்புங்கள். தவறான செய்திகளை பரப்பாதீர்கள் என்றார். மேலும் அவருடன் நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், தயாரிப்பாளர் தாணு, இயக்குனர் சீனு ராமசாமி, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அமீர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர். அதை தொடர்ந்து மருத்துவமனை சார்பில் பாரதிராஜா உடல்நிலை குறித்த அறிக்கை விடப்பட்டுள்ளது. அதில் பாரதிராஜாவுக்கு நுரையீரல் பாதிப்பு உள்ளதால் ஐசியூவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அவரது உடல்நிலை சீராகவே உள்ளது. உடல் உறுப்புகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
