‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது அவர் விஜயை வைத்து ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் எடிட்டிங் பணிகள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப வேலைகளும் நிறைவடைந்து, பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ நடித்துள்ளார். தீவிர அரசியலில் களமிறங்கியுள்ள விஜய், நடிப்பில் இருந்து விலகுவதற்கு முன் நடிக்கும் கடைசி படம் இதுவாக இருக்கலாம் என்று கூறப்படுவதால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சினிமா ரசிகர்களை தாண்டி அரசியல் களத்திலும் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
வழக்கமான விஜய் படங்களிலிருந்து மாறுபட்டதாக, ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் அரசியல் அம்சங்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் பிரம்மாண்டமாக சமீபத்தில் நடைபெற்றது. தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு நாளை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி, சமூக வலைதளங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
