தெருக்கூத்து கலைப் பின்னணியில் உருவாகி, விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘ஜமா’ திரைப்படத்தை இயக்கிய பாரி இளவழகன், தற்போது புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ ஆகிய ஹாட்ரிக் வெற்றிப் படங்களுக்குப் பிறகு, மில்லியன்டாலர் நிறுவனம் தனது 7வது தயாரிப்பாக இந்த படத்தை தயாரிக்கிறது.

‘ஜமா’ படத்திற்கு பிறகு, இந்த புதிய திரைப்படத்திற்கும் பாரி இளவழகனே கதை, திரைக்கதை எழுதி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அதேபோல் நடிகை ரோஜாவும் இந்த படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
‘மண்டேலா’, ‘மாவீரன்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த பரத் சங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சென்னையின் பெரம்பூர் பகுதியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த படம், குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய பேமிலி என்டர்டெயினராக தயாராகி வருகிறது. கோடை விடுமுறையை இலக்காகக் கொண்டு படம் வெளியாக உள்ளது. நடிகை ரோஜா எந்த வகை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தற்போது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
