மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக, தற்போது அதன் மூன்றாம் பாகம் மிகுந்த பரபரப்புடன் தயாராகி வருகிறது. இந்த இரண்டு பாகங்களும் இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு, அங்கும் வணிக ரீதியாக பெரும் வெற்றியை பெற்றன. தற்போது இந்தி மொழியிலும் ‘திரிஷ்யம் 3’ படத்தை உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் 2ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அக்ஷய் கண்ணா, ‘திரிஷ்யம் 3’ படத்திலிருந்து விலகுவதாக அறிவித்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மூன்றாம் பாகத்திலும் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் நிலையில், அவர் விலகியது பெரும் விவாதத்தை கிளப்பியது.
ஆரம்பத்தில் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் படத்தில் இணைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ‘திரிஷ்யம் 3’ படத்தின் தயாரிப்பாளர்கள், அக்ஷய் கண்ணா நடித்த கதாபாத்திரத்திற்கு பதிலாக நடிகர் ஜெய்தீப் அலாவத்தை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்தீப் அலாவத் பாலிவுட்டில் சல்மான் கான், ஷாருக்கான் ஆகியோரின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் என்பதுடன், கமல் ஹாசன் இயக்கி நடித்த ‘விஸ்வரூபம்’ படத்தில் சலீம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
