‘துரோகி’, ‘இறுதிச்சுற்று’, ‘சூரரைப் போற்று’ போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்கரா தற்போது நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா ஆகியோர்களை வைத்து ‘பராசக்தி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் சுதா கொங்கரா யூடியூப் தளத்தில் உள்ள பல்வேறு சேனல்களுக்கு தொடர்ச்சியாக பேட்டிகள் அளித்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் அவர் பேசுகையில், “எனக்கு ஒரு முழுநீள காதல் கதையை உருவாக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட காலமாக உள்ளது. அதற்கான கதை தற்போது தயாராக உள்ளது. இன்னும் திரைக்கதை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “நான் ரஜினிகாந்த் சாரின் தீவிர ரசிகை. ரஜினி சாரை வைத்து ‘முதல் மரியாதை’ போன்ற ஒரு உணர்வுபூர்வமான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதே நேரத்தில் பல்வேறு வகையான கதைகளை திரைப்படமாக்க வேண்டும் என்ற விருப்பமும் இருக்கிறது. ஆனால் தற்போது நான் மிகவும் சோர்வடைந்த நிலையில் இருக்கிறேன். விரைவில் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க விரும்புகிறேன்” என தனது மனநிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
