இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘ஜன நாயகன்’. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் அட்லீ, என்னோட அண்ணன், என்னோட தளபதி. தளபதி எங்களுக்கெல்லாம் ஒரு எமோஷன். நான் உதவி இயக்குநராக வேலை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒரு படப்பிடிப்புத் தளத்தின் கடைசி நாளில், ‘அட்லீ, நீங்க ரொம்ப கடினமாக உழைக்கிறீங்க. உங்களுடைய உழைப்பு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நல்ல கதை இருந்தா சொல்லுங்க, நம்ம சேர்ந்து படம் பண்ணலாம்’ன்னு சொன்னாரு. எந்த ஒரு ஸ்டார் நடிகரும் இப்படி சொல்ல மாட்டார்கள்.
அந்த சமயத்திலேயே அவர் ஏற்கனவே 50 படங்களுக்கு மேல் நடித்திருந்தார். இருந்தாலும், மனதளவில் அவர் மிகவும் நல்ல மனிதர் என்று உணர்ச்சிபூர்வமாக பேசினார். தொடர்ந்து, என்னிடம் இருக்கும் எல்லாத்துக்கும் காரணம் என்னுடைய தளபதி, என்னுடைய விஜய் அண்ணன்தான்” எனக் கூறினார்.
மேடையில் விஜய் ஸ்டைலில் ஒரு குட்டிக் கதையையும் அட்லீ பகிர்ந்தார். “வாழ்க்கையில் நாம் மூன்று வகையான மனிதர்களை சந்திப்போம். இதற்கு உதாரணமாக ஒரு மரத்தை எடுத்துக்கொள்ளலாம். சிலர் இலைகளைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் நம்முடன் இருப்பார்கள். காற்று அடித்தால் அவை பறந்து போய்விடும். அது இயற்கை. இன்னொரு வகை கிளைகள். அவை வலிமையாக இருக்கும், ஆனால் ஒரு கட்டத்தில் உடைந்து விடும். ஆனால், உங்களுக்குப் பின்னால் வேர் மாதிரி ஒரு கூட்டம் இருக்கிறது” என கூறிய அட்லீ, மேடையிலிருந்து ஓடிச் சென்று விஜய்யை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்
