சமீபத்தில் நடந்த திரைப்பட சங்கங்களின் கூட்டுக் கூட்டத்தில், வரும் ஆகஸ்ட் 16ம் தேதி முதல் புதிய பட தயாரிப்புகளை நிறுத்தவும், நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்தவும் முடிவு செய்யப்பட்டு, இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது. நடிகர்களின் சம்பள உயர்வு, மற்றும் ஓடிடி வெளியீடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தற்போதைய கூட்டுக் குழுவின் இந்த முடிவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.


இந்தச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நடிகர்களைச் சார்ந்த பொதுத் தீர்மானம் மற்றும் தனுஷ் குறித்து தனித் தீர்மானம் எங்களுக்கு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து தனுஷ் மீது இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. எந்த புகாரும் நிலுவையில் இல்லை. இரு தரப்பும் கலந்துரையாடி, பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டிய நடைமுறை சிக்கல்களுக்கு, எங்களிடம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றியதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறது.


திரைப்படங்களில் மிக முக்கிய பங்காற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தை ஆலோசிக்காமல், ஆயிரக்கணக்கான நடிகர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் வகையில், படப்பிடிப்புகளை முழுமையாக நிறுத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது மிகப் பெரிய தவறு. இந்த தன்னிச்சையான அவசர தீர்மானத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். மேலும், இது தொடர்பாக விரைவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.