ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தியன் 2.இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இரண்டாவது பாடலான நீலோற்பம் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் பாடல்களில் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்டைல் வெளிப்படையாக தெரிகிறது என்பது தெளிவாகவே தெரிகிறது. முதல் பாடலான பாரா பாடல் பொன்னியின் செல்வன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் போட்ட பாடலைப் போலவே செம்மையாக இருந்தது. அதேபோல், தற்போது வெளியான நீலோற்பம் பாடல் ஏ.ஆர். ரஹ்மான் சாயலில் செம்ம மெலோடியாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஷங்கர் படத்தின் பாடல்கள் என்றாலே பிரம்மாண்டமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சாதாரண ரொமாண்டிக் பாடல் என்றாலும் ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என சென்று விடுவார். இந்த பாடல் சாதாரண கஃபே பாடல் போல உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த ஒரே ஒரு லிப்ஸ்டிக்கை மட்டும் வைத்து பாடலை ஓட்டியிருப்பது படத்தில் பார்த்தால்தான் எவ்வளவு வொர்க் அவுட் ஆகும் என தெரியும் என்கிறார்கள்.
அன்பே அன்பே கொல்லாதே, டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவளா, அய்யங்காரு வீட்டு அழகே, என்னோடு நீயிருந்தால், சஹானா சாரல் தூவுதோ போன்ற ஷங்கர் இயக்கத்தில் வெளியான மெலோடி பாடல்கள் அளவுக்கு இந்த பாடல் இருக்கிறதா? என்றால் பதில் இல்லை. ஆனால், இந்த படத்துக்கும் கதைக்கும் பொருத்தமாக அமைந்தால் பாடல் ரசிகர்களை கவரும். சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் பாடல் என்பதால் ஹிட் அடிக்குமா என்பதை காலம்தான் சொல்லும்.