கார்த்தி நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகிய ‘வா வாத்தியார்’ படத்தில் கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் டீசர் கடந்த நவம்பரில் வெளியானது. ஆனால், இதுவரை இப்படம் எப்போது திரைக்கு வரும் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

‘கங்குவா’, ‘தங்கலான்’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் நிதிச் சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிக்கல்களை தீர்த்துக்கொண்டால் மட்டுமே ‘வா வாத்தியார்’ படம் எந்த இடையூறும் இல்லாமல் திரைக்கு வர முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால், இப்போது அது நடக்க வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.
இந்த காரணத்தினால் ‘சர்தார் 2’ படத்தின் ப்ரமோஷன் தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று, இப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியிடப்பட்டது. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கார்த்தி, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கோடை விடுமுறைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம்.