பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கஜோல், ஷாருக்கானுடன் நடித்த பல படங்களின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றவர். தமிழிலும் பிரபுதேவாவுடன் மின்சாரக் கனவு படத்தில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தனுஷுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரி–2 படத்தில் வில்லியாக நடித்து மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

கஜோல் மற்றும் ட்விங்கிள் கன்னா இணைந்து நடத்தும் நிகழ்ச்சி ‘Too Much with Kajol & Twinkle’ தற்போது பேசுபொருளாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கஜோல் கூறிய கருத்து இணையத்தில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில் விருந்தினர்களாக நடிகர் விக்கி கவுஷல் மற்றும் கிரித்தி சனோன் கலந்து கொண்டனர். “திருமணத்திற்கு காலாவதி தேதி வேண்டுமா?” என ட்விங்கிள் கேட்ட போது, விக்கி, கிரித்தி, ட்விங்கிள் ஆகியோர் “இல்லை” என பதிலளித்தனர். ஆனால் கஜோல் மட்டும் “ஆம்” என கூறினார். ட்விங்கிள் “திருமணம் ஒரு வாஷிங் மெஷின் இல்லை” என கூறிய நிலையில், கஜோல் சரியான நேரத்தில் சரியானவரை மணந்துவிடுவோம் என்பதற்கு எந்த உத்தரவாதம்? புதுப்பித்தல் விருப்பம் இருந்தால் நல்லது. காலாவதி தேதி இருந்தால் யாரும் நீண்ட காலம் கஷ்டப்பட வேண்டாம் என கூறினார். இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாகி வருகிறது.

