இயக்குனர் ராஜமௌலி மற்றும் SSMB29 படக்குழுவினர் கென்யாவில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்புவதற்கு முன் அந்நாட்டு அமைச்சர் முசலியாவைச் சந்தித்துள்ளனர். கென்யா அமைச்சர் இந்த சந்திப்பும் குறித்தும் இப்படத்தினை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், உலகின் சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ் ராஜமௌலி–யின் படப்பிடிப்பு தளமாக கென்யா மாறியது. இந்தியாவின் பார்வையாளர் இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், கதையாசிரியர் ஆகிய ராஜமெளலி, உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் கற்பனையையும் கவர்ந்தவர்.
இரண்டு தசாப்தங்களுக்கு மேல் நீளும் தனது சினிமா வாழ்க்கையில், சக்திவாய்ந்த கதைப்போக்குகள், அதிரடி காட்சிகள் மற்றும் ஆழமான பண்பாட்டு உணர்வுகளை ஒன்றிணைத்து படமாக்குவதில் ராஜமெளலி புகழ்பெற்றவர். கிழக்கு ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்ட அவரது 120 பேர் கொண்ட குழு, கென்யாவை முதன்மை படப்பிடிப்பு தளமாகத் தேர்வு செய்தது. ஆப்பிரிக்கக் காட்சிகளின் சுமார் 95% காட்சிகள் கென்யாவில் படமாக்கப்படுகின்றன.
மசாய் மாறாவின் பரந்த புல்வெளிகள் முதல் நைவாஷாவின் அழகிய இடங்கள், சாம்புருவின் மலைப்பாங்கான நிலப்பரப்பு, புகழ்பெற்ற அம்போசெலி வரை – கென்யாவின் இயற்கைக் காட்சிகள் அனைத்தும் ஆசியாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பில் இடம்பெறுகின்றன. 120க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கென்யாவில் படமாக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு ஒரு சினிமா மைல்கல்லாக மட்டும் இல்லாமல், எங்கள் நாட்டின் அழகு, விருந்தோம்பல், உலக அரங்கில் எங்கள் இடத்தை வெளிப்படுத்தும் வலுவான அறிக்கையாகும். மீதி பணிகளை இந்தியாவில் தொடர படக்குழுவினர் இன்று புறப்பட்டுள்ள நிலையில், கென்யா பெருமிதத்துடன் நிற்கிறது; தனது கதையை SSMB29 என்ற கண்ணோட்டத்தில் உலகத்துடன் பகிரத் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.