இசைஞானி இளையராஜா, தனது கனவு படைப்பான ‘வேலியண்ட்’ சிம்பொனியை கடந்த மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் அரங்கேற்றியிருந்தார். இதன் மூலம் அவர் உலகளவில் சாதனை படைத்தார். இதற்காக, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்பே அறிவித்திருந்தார். அதனை நிறைவேற்றும் வகையில், மேலும் அவர் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று மாலை இளையராஜாவுக்கு மாநில அரசு சார்பில் சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், இசைஞானி இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இசை உலகில் தமிழுக்கும் தமிழருக்கும் மட்டுமல்லாது, தமிழ்நாட்டுக்கே தனிப்பட்ட பெருமையைத் தேடி தந்தவர் இசைஞானி இளையராஜா. சாதனைகளின் இமயமலை, எளிமையின் உச்சம் ஆகியவற்றை ஒருங்கே தன்னகத்தே கொண்டிருக்கும் மாமனிதர் அவர். சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை தனது இசையின் மூலம் ஒன்றிணைத்த இசை மேதை அவர்.
குறிப்பாக, திரையிசையைக் கடந்து முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசை வெளிப்பாட்டான சிம்பொனியை அவர் அரங்கேற்றியிருப்பது, ஒவ்வொரு இசைக் கலைஞருக்கும் புதிய முயற்சிகளை மேற்கொள்ள ஊக்கமளிக்கும் மிகப்பெரிய சாதனையாகும். அவரைப் பார்த்து வளர்ந்த கலைஞனாக இருப்பது எனக்கு எப்போதும் பெரும் மகிழ்ச்சியாகும். இந்த மகத்தான கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதில் உங்களைப் போலவே நானும் பெருமகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு அரசு இளையராஜாவின் பொன்னான இசைப் பயணத்தை கொண்டாடுவதை, அவருக்கான பாராட்டாக மட்டுமன்றி, அனைத்து இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரமாகவே நான் கருதுகிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே” என தெரிவித்துள்ளார்.