மலையாள திரையுலகின் முக்கிய நடிகரான பஹத் பாசில், இதுவரை தமிழில் பிற ஹீரோக்கள் நடித்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே தோன்றியிருந்தார். ஆனால் இப்போது முதல் முறையாக தமிழில் ஒரு முழுநீள நாயகன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அந்தப்படத்தை ‘96’, ‘மெய்யழகன்’ போன்ற படங்களை இயக்கிய பிரேம்குமார் இயக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் வழங்கிய பேட்டியில் பிரேம்குமார், இந்தப் படமும் ஒரு உணர்வுபூர்வமான படமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

2017-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார் பஹத் பாசில். அந்த படத்தில் அவர் ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’, கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’, ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’, சமீபத்தில் வடிவேலு நடித்த ‘மாரீசன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் பஹத் பாசில் நடித்த மலையாள திரைப்படமான ‘ஓடும் குதிர சாடும் குதிர’ தோல்வியடைந்தது. தற்போது அவர் இரண்டு மலையாள படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் நடித்துவருகிறார்.