நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இணைந்து வெளியிட்ட “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் வெளியானபோதே, அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. “சர்தார்” வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் வேகமாக உருவாக்கப்பட்டது.

அதன்படி, “சர்தார் 2” படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்திற்கான பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது குறித்து படக்குழு வெளியிட்ட தகவலில், “சர்தார் 2” படத்திற்கான டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து, “சர்தார் 2” பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, “சர்தார் 2” படத்தின் டீசர் தயாராகிவிட்டதாகவும், அதற்கான சென்சார் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் தெரிகிறது. மேலும், டீசரின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி, விரைவில் 2.54 நிமிடங்கள் ஓடக்கூடிய டீசர் வெளியிடப்படலாம் என்று தெரிகிறது. முன்னதாக, “சர்தார் 2” படத்திற்கான சண்டைக் காட்சியை படமாக்கும்போது, நடிகர் கார்த்தி விபத்தில் சிக்கினார். இதில் காயமடைந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். “சர்தார் 2” படத்தில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.