ரஜினியின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வசூலை பெற்ற படம் ‘ஜெயிலர்’ ஆகும். ஓய்வுபெற்ற ஜெயிலர் முத்துவேல் பாண்டியனாக ரஜினி நடித்திருந்தார். அனிருத்தின் அசத்தலான இசை, நெல்சனின் வணிகமயமான இயக்கம் ஆகியவை இணைந்து உருவான இப்படம் 650 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபீஸில் வெற்றிப் பெற்றது.
இந்த ஒரே படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகிய மல்டி-ஸ்டார் கூட்டணியும், தமன்னாவின் நடனமும் படம் வெற்றிபெற பெரிதாக உதவியது. இதனால், இந்த ஃபார்முலாவை தற்போது மீண்டும் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’யிலும் இதே மாதிரி ஃபார்முலா பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘ஜெயிலர்’ வெற்றிக்கு பிறகு, ‘ஜெயிலர் 2’ இப்படத்தின் ஃபார்முலாவை மேலும் சிறப்பாக்கி உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு தொடங்கியிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் நடிகர்கள் பட்டியலும் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இதில் கூடுதலாக பாலகிருஷ்ணா இணையலாம் என்று கூறப்படுகின்றது. முதல் பாகத்திலேயே அவர் நடிக்க வேண்டியிருந்தது, ஆனால் அவரது கதாபாத்திரம் மிகச் சிறியதாக இருந்ததால், இரண்டாம் பாகத்தில் பெரிய கதாபாத்திரமாக கொண்டு வரலாம் என நெல்சன் விரும்பியதாகவும் இதன் காரணமாக ‘ஜெயிலர் 2’-ல் பாலய்யா நடிக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் உலாவருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே தொடங்கப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் , ரஜினியின் பகுதிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. முதல் 15 நாட்கள் இதே இடத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது, அதன் பிறகு ஈசிஆரில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடக்கலாம் என கூறப்படுகிறது.
முதல் பாகத்தில் வில்லன் வர்மா (விநாயகன்) சிறப்பாக நடித்திருந்தார். ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் அவரை பழி வாங்குகிறார். வர்மா இறப்பதற்கு முன்பு, “நீ என்னை கொல்லலாம். ஆனால், எனக்கு பின்னால் வருபவர்களை ஒன்றும் செய்ய முடியாது” என்று ஒரு முக்கியமான வசனம் பேசுகிறார். இந்த வசனத்திலிருந்தே இரண்டாம் பாகத்திற்கான கதைக் கரு உருவாகியிருக்கலாம் என்று பேசப்படுகிறது. நெல்சன் இயக்கத்தில் அனிருத்தின் இசை இல்லாமல் இருக்க முடியாது. எனவே, மான்டேஜ் பாடல்களுக்கான இசையும், ஒரு பாடலுக்கான இசையும் அனிருத் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.