திருவண்ணாமலை அருகே உள்ள ஜவ்வாது மலைப் பகுதியை ஒட்டியுள்ள காட்டில், ஆண்டுதோறும் கன்னி தெய்வங்களுக்கு செய்ய வேண்டிய பூஜையை நடத்தியதை ஒரு சூனியக்காரியின் ஆவி தடுப்பதாகவும், மேலும், அந்த காட்டுக்குள் சென்றவர்கள் திரும்பி வந்ததில்லை என்றும் அந்த கிராம மக்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். இந்த தகவலை அறிந்த ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், அரியா செல்வராஜ் ஆகிய நான்கு பேரும், அந்த காட்டுக்குள் சென்று ஒரு டாக்குமென்ட்ரி படமாக்க நினைக்கிறார்கள்.
இவர்களுடன், அந்த கிராமத்தைச் சேர்ந்த யுவிகா ராஜேந்திரன் என்ற இளம் பெண்ணும் வழிகாட்டியாக சேர்கிறாள். இதில், அந்த காட்டுக்குள் சென்ற ஐந்து பேரும் உயிருடன் திரும்பினார்களா? உண்மையில் சூனியக்காரியின் ஆவி இருக்கிறதா? சப்த கன்னிகள் உண்மையாக உள்ளனவா? என்பதே கதையின் மீதியிருக்கும் முக்கிய அம்சமாகும்.
படத்தின் கதைக்களம் முழுவதும் ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் ஆகிய ஐந்து முக்கிய கதாபாத்திரங்களைச் சுற்றியே செல்கிறது. அவர்கள் தங்களது கதாபாத்திரங்களை முழுமையாக உணர்ந்து, திறம்பட நடித்து இருக்கிறார்கள். காட்டுக்குள் செல்லும் முன்னர் அவர்கள் பயப்படாதது போல் நடந்து கொண்டு, பின்னர் உண்மையில் பேயைப் பார்த்து அலறும் காட்சிகள், அவர்களின் அசாத்தியமான நடிப்பால் பயத்தை ஏற்படுத்துகிறது.
ஒரு மலை கிராமத்தில் உள்ள கன்னி தெய்வங்களையும், அதை தடுக்கும் சூனியக்காரியின் ஆவியையும் மையமாகக் கொண்டு, இந்த படத்தை இயக்குனர் ஹேம்நாத் நாராயணன், ஒரு முழுமையான சஸ்பென்ஸ் திரில்லராக வடிவமைத்துள்ளார். இது சாதாரண பேய் படம் போல இல்லாமல், ‛பவுண்ட் ஃபூட்டேஜ்’ (Found Footage) என அழைக்கப்படும் நேரடியாக கேமராவில் பதிவான காட்சிகளின் மூலம் உருவாக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. தொடக்கத்தில் சுமார் 7:30 மணி நேரம் படம் எடுக்கப்பட்டு, அதனை எடிட்டிங் மூலம் 2.15 மணி நேரமாக திரையரங்கில் கொண்டுவந்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், கதையின் ஒவ்வொரு காட்சியையும் கேமரா மூலம் நம்மால் நேரில் பார்க்கிறோம் என உணர வைத்துள்ளார். மேலும், இசை இல்லாததால், கேவ்ய்ன் பிரெடெரிக் தனது ஒலி வடிவமைப்பின் மூலம், பயத்தை அதிகரிக்கச் செய்து, படத்தின் பரபரப்பை உயிர்ப்பித்து இருக்கிறார்.