இசையமைப்பாளர் இளையராஜாவை கௌரவிக்கும் பாராட்டு விழா தமிழக அரசு சார்பில் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இளையராஜா தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நேற்றைய தினம் தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்ததால் நான் அதிகம் பேச முடியவில்லை. ஒரு அரசு, முதல்வர் இவ்வளவு சிறப்பாக ஒரு பாராட்டு விழாவை நடத்துவது எனக்கு நம்பமுடியாத விஷயம். எதற்காக எனக்கு இவ்வளவு அன்பு செலுத்துகிறார்கள்? என முதல்வரிடம் கேட்டேன். நான் போட்ட இசைதான் காரணமாக இருக்கலாம், அதை அவர் மட்டுமே சொல்ல முடியும்.
நான் பாராட்டு எதிர்பார்ப்பவன் அல்ல. ஆனாலும், சிம்பொனியின் சிகரத்தை தொட்டதால்தான் இந்த விழா நடந்திருக்கிறது. மேலும் முதல்வர் என்னிடம் சங்கத்தமிழ் நூல் பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும், அதை உங்களைத் தவிர வேறு யாராலும் முடியாது என்று கூறியதும் எனக்கு மிகுந்த ஊக்கம் அளித்தது. கண்டிப்பாக அவரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன் என்றுள்ளார்.