லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கூலி. இப்படம் நாளை ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படத்தை இயக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியான போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. குறிப்பாக மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ இவற்றுள் எல்சியு அம்சங்கள் என அடுத்தடுத்து வெற்றிப்படங்களை வழங்கிய லோகேஷ் இப்படத்தை எந்த மாதிரியாக கொடுக்க போகிறார் என்பதே இதற்கு காரணம். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் இதே வேளையில் கூலி படத்தின் ரிலீஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது.
திரையுலகில் வெற்றிகரமான 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது வாழ்த்தை நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அதில், தலைவா, உங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன், உங்களைப் பின்பற்றி, உங்கள் பாதையில்தான் நடந்தேன். நீங்கள் இருக்கும் அதே துறையில் நானும் இருப்பது எனது அதிர்ஷ்டம் என கூறியுள்ளார்.