ஹீரோயின் தேவிகா சதீஷை பார்ப்பதற்காக நிக்கியின் குடும்பத்தினர் வருகிறார்கள். காபி கொடுக்கும் தேவிகாவை பார்த்தவுடன், இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து, ஹனிமூனுக்கும் சென்றுவிட்டதாக நிக்கியின் உறவினர் அதிர்ச்சித் தகவலை ஆதாரத்துடன் கூறுகிறார். இதற்கு தேவிகாவும், அவரது குடும்பமும் மறுப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், கொடுக்கப்பட்ட ஆதாரத்தை வைத்து, தன்னிடம் திருமணம் நடந்ததாக கூறப்படும் யூடியூப்பர் தேவ்வை சந்திக்கிறார் நாயகி. பின்னர், இருவருக்கும் தெரியாமலேயே திருமணம் நடந்தது உறுதியாகிறது. அது எப்படி சாத்தியமானது? இப்படியாக அறியாமலே நடந்த அந்த ‘சட்டப்பூர்வ’ திருமணத்தை ரத்து செய்ய நினைக்கும் இந்த இருவர் இடையே காதல் மலர்ந்தால் என்ன நடக்கும் என்பதே யோலோ படத்தின் கதை.

‘யோலோ’ என்றால் You Only Live Once (நீங்கள் ஒருமுறை மட்டுமே வாழ்கிறீர்கள்) என்று பொருள். இந்தப் பெயரில் நாயகன் தனது நண்பர்களுடன் யூடியூப் சேனல் நடத்துகிறார்.
படத்தின் தொடக்கக் காட்சிகளைப் பார்த்தவுடன் சுவாரஸ்யமாக இருக்கும் போலத் தோன்றினாலும், சில காட்சிகளுக்குப் பிறகு கதை வழக்கமான பாதையைத் தொடர்கிறது. யூடியூப்பில் பிராங்க் வீடியோக்கள், அந்தக் குழுவில் உள்ள நாயகனை நேசிக்கும் நாயகி, நாயகன் சொல்லத் தயங்கும் காதல், உதவிசெய்யும் நண்பர்கள், எதிரியாக வரும் வில்லன் என பழக்கமான முறை. இருவருக்கும் எப்படி திருமணம் நடந்தது என்பதில்தான் சிறிது புதுமை. அதாவது, இரு காதல் பேய்கள் இவர்களின் உடலில் புகுந்து திருமணம் செய்து, பாஸ்போர்ட் எடுத்து, விசா வாங்கி, ஹனிமூனுக்குக் கூட சென்றுவிடுகிறார்கள். ஆனால், நடந்ததை இவர்களுக்கு தெரியாது. இதிலேயே டார்லிங், காஞ்சனா படங்களின் தாக்கம் அதிகம்.
நாயகன் தேவ் அழகாக இருந்தாலும், நடிப்பில் சராசரியே. நாயகி தேவிகா சற்றே முன்னேற்றமாக நடித்திருக்கிறார். ஆனால் நண்பர்கள் நடிப்பின் பெயரில் சலிப்பைத் தருகிறார்கள். “எனக்கு செகன்ட் ஹேண்ட்தான் பிடிக்கும்” என்று வரும் நிக்கி மிகுந்த தொந்தரவு அளிக்கிறார். வில்லன், மந்திரவாதி உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களும் பார்வையாளரின் பொறுமையைச் சோதிக்கிறார்கள். பயமுறுத்த வேண்டிய மந்திரவாதி சிரிப்பைத் தருகிறார். பேய்களின் பின்கதை வலுவாக இருக்கும் என நினைத்தாலும் அதுவும் பலவீனமாகவே உள்ளது. மகளின் திருமணமோ, வெளிநாட்டு பயணமோ அப்பாவுக்கே தெரியாமல் போவது நம்பமுடியாதது. பேய்களின் நோக்கம் என்ன, வில்லனின் பிரச்னை என்ன என பல கேள்விகள் கிளம்புகின்றன. சூரஜின் ஒளிப்பதிவும், சேவியர் இசையும் ஓரளவு ஆறுதலாக இருக்கிறது. நாயகன்–நாயகியின் நண்பர்கள் நடிப்பில் மிகுந்த செயற்கை தனம் இருந்தாலும், காதல் காட்சிகள் மட்டும் நன்றாக வந்துள்ளன.