வானியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் புதுமுக ஹீரோ அஜித் தேஜ், 300 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணத்தை ஒரு பழமையான தொலைநோக்கி (டெலஸ்கோப்) மூலம் ஆய்வு செய்கிறார். அப்போது அவருக்கு ஒரு விசேஷ சக்தி கிடைக்கிறது. அதாவது, யாருடைய கண்களில் பார்த்தாலும் அவர்கள் எப்போது இறப்பார்கள் என்பதை துல்லியமாகச் சொல்லக்கூடிய ஆற்றல். அவர் கூறுவது தப்பாமல் நடக்கும். இதன் போது, தனது காதலியான ஹீரோயின் ஸ்ரீஸ்வேதாவின் கண்களில் பார்ப்பதன் மூலம், அவர் ஏழு நாட்களில் இறக்கப்போகிறார் என்பதை அறிகிறார். நாய்க்கடி காரணமாக ஹீரோயினுக்கு ரேபிஸ் தாக்கம் ஏற்படுகிறது. அடுத்து அந்த ஏழு நாட்களில் என்ன நடக்கிறது, ஹீரோ ஹீரோயினை காப்பாற்றுகிறாரா என்பதே படத்தின் கதை. இந்த படத்தை புதுமுக இயக்குனர் எம்.சுந்தர் இயக்கியுள்ளார்.

இயக்குனர் கே.பாக்யராஜின் சீடர் இயக்கிய கதை என்பதாலும், அந்த 7 நாட்கள் என்ற தலைப்பு வைத்திருப்பதாலும், மேலும் அதில் பாக்யராஜ் நடித்திருப்பதாலும், பழைய படத்துடன் தொடர்பு இருப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் இந்த படத்துக்கும், அந்த படத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. புதுமுக ஹீரோ அஜித் தேஜ், காதல் காட்சிகளிலும், சூப்பர் பவரால் அவதிப்படும் காட்சிகளிலும், காதலியின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் காட்சிகளிலும் சுமாரான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோவுக்கான தகுதி அவரிடம் குறைவாகவே தெரிகிறது. இடைவேளைக்குப் பின், அவர் நடிப்பதற்கான வாய்ப்பு கொஞ்சம் அதிகரிக்கிறது. ரேபிஸ் தாக்கம் பெற்ற ஹீரோயினை குணப்படுத்த, அவரை கொடைக்கானலுக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும், அங்கே நிகழும் சம்பவங்களும் சராசரியாக உள்ளன. கிளைமாக்ஸில் ஹீரோயினை காப்பாற்ற, ஹீரோ ஆக்ஷனில் மாறுவது மட்டுமே அவரின் பலமாக அமைகிறது.
முதற் பாதியில் பெரிதாகத் தெரியாமல் செல்லும் ஹீரோயின், இரண்டாம் பாதியில் ரேபிஸ் தாக்கம் பெற்றவராகவும், கிளைமாக்ஸில் வேறொரு உருவமாகவும் மாறி, மிரள வைக்கும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். புதுமுக ஹீரோயின் ஸ்ரீஸ்வேதா, அந்த கெட்அப்பும் மேக்கப்பும், உணர்ச்சி போராட்டங்களும் இதுவரை எந்த நடிகையும் செய்திராத விதத்தில் நடித்திருப்பது பாராட்டத்தக்கது.
மந்திரியாக வரும் கே.பாக்யராஜ் மற்றும் ஹீரோவின் தந்தையாக வரும் நமோ நாராயணன் ஆகியோரின் கூட்டணி சிறப்பாக இருக்கும் என நினைத்தாலும், அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏமாற்றமே. பிளாஷ்பேக்கில் மலைவாசியாக வரும் தலைவாசல் விஜயின் காட்சிகள் உணர்ச்சி பூர்வமாக இருக்கும். அதேபோல் நாய்க்கடிக்கு ஆயுர்வேத மருந்தளிக்கும் சாமியார் கதாபாத்திரம் நினைவில் நிற்கும் வகையில் உள்ளது. ஆனால் பெரும்பாலான காட்சிகளில் அழுத்தமோ விறுவிறுப்போ இல்லை. காதல் காட்சிகள் இனிமையோ, வண்ணமோ இல்லாமல் போய்விட்டன. கதையின் போக்கில் பிடித்துக்கொள்ளும் விறுவிறுப்பும் இல்லை. ஹீரோவின் சூப்பர் பவர், பேண்டசி அம்சம், நாய்க்கடி பாதிப்பு போன்றவை புதிதான விஷயங்களாக இருந்தாலும், திரைக்கதை தடுமாறுவதால் படம் ஒருமுறை பார்க்கத்தக்கதாக மட்டுமே உள்ளது.