தனது மகன் காணாமல் போனதாக புகார் அளிக்க கோவளம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார் அருண் பாண்டியன். திருமண அழைப்பிதழ் வழங்குவதற்காக போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் அக்ஷரா ரெட்டி ஸ்டேஷனுக்கு வருகிறார். அப்போது ஸ்டேஷனில் ஏட்டையா மூணாறு ரமேஷ், திருடன் தங்கதுரை உள்ளிட்ட பலர் இருக்கின்றனர். அந்த நேரத்தில் மர்ம நபர் ஒருவன் சுற்றிலும் குண்டுகளை வைத்து போலீஸ் ஸ்டேஷனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, கம்ப்யூட்டர் மூலமாக அங்குள்ளவர்களை ஆட்டுவிக்கிறான். உள்ளே வந்தவர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத வியூகம் அவனால் அமைக்கப்படுகிறது. அவன் கோரிக்கைப்படி, அங்கே வருகிற நீதிபதி வினோதினி ஒரு பழைய வழக்கை விசாரிக்கிறார்.

அந்த வழக்கு என்ன? போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கும் குண்டு வெடிக்கிறதா? இப்படி மிரட்டும் மர்ம நபர் யார்? அவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி கண்டுபிடிக்கிறாரா? அருண் பாண்டியனின் மகன் கிடைக்கிறாரா? என பல கேள்விகளை எழுப்பி, அதற்கு பதில் கூறும் வகையில் ரைட் படம் நகர்கிறது.பிரதமர் வருகையையொட்டி நடக்கும் பாதுகாப்பு பணிகளுக்காக இன்ஸ்பெக்டர் நட்டி ஸ்டேஷனை விட்டு வெளியேறியபோது, அருண் பாண்டியன் புகார் அளிக்க வருகிறார். இதுவே கதையை சூடுபிடிக்கச் செய்கிறது. ஆரம்பத்தில் சற்றே ஓவராக நடிப்பது போல இருந்தாலும், பின்னர் அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் அருண் பாண்டியன். சில தருணங்களில் அவர் தான் குண்டு வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் கூட எழுகிறது. இதுவே அந்தக் கதாபாத்திரத்தின் பலமாக அமைகிறது.
போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக அக்ஷரா ரெட்டியின் நடிப்பு சராசரியாக இருக்கிறது. போலீஸ் ஏட்டையாவாக வரும் மூணாறு ரமேஷ் தான் அதிக காட்சிகளில் பிரகாசிக்கிறார். வழக்கமான போலீஸ் மனநிலை, குண்டு வெடிக்கும் பயம் போன்ற பல காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார். திருடன் தங்கதுரை படத்தில் நகைச்சுவையை சேர்த்தாலும், சில முக்கிய தருணங்களில் அவரது காமெடி காட்சிகள் கதையின் பாரத்தை குறைத்துவிடுகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி அதிகமாகத் தெரியாமல் இருந்தாலும், கிளைமாக்ஸில் வந்து கதை போக்கை மாற்றி, தனது நடிப்பால் முத்திரை பதிக்கிறார்.
பத்மேஷ் ஒளிப்பதிவு போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளை இயல்பாக காட்டியுள்ளது. குணா சுப்ரமணியனின் பின்னணி இசை சுமாரான ரீதியில் அமைந்துள்ளது. ஆனால் இத்தனை பெரிய சம்பவங்கள் நடக்கும்போது, உயர் அதிகாரிகள் வீடியோ கால் மூலமாக மட்டுமே பேசுவார்களா? என்ற கேள்வி எழாமல் இல்லை. போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் சினிமாதனமாகத் தோன்றுகின்றன.
நீதிபதியாக வரும் வினோதினி, கதையை நகர்த்த உதவியிருந்தாலும், அவரின் வழக்கமான மேனரிசம் சீரியசான உணர்வை குறைத்துவிடுகிறது. மற்றபடி, அரசியல்வாதி, அவரது மகன், குற்றவாளிகள் என வழக்கமான அம்சங்களுடன் கதை செல்கிறது. ஆனால் வீரம் யுவினா நடித்துள்ள முக்கியக் கதாபாத்திரம் மற்றும் அவரின் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தின் பலமாக விளங்குகின்றன. பல போலீஸ் கதைகள், போலீஸ் ஸ்டேஷனை மையமாகக் கொண்டு அமைந்துள்ள படங்களை பார்த்திருந்தாலும், ரைட் படம் வித்தியாசமாகத் தெரிகிறது. இப்படிப்பட்ட கதையை சிந்தித்து, பல ட்விஸ்ட்களுடன் சஸ்பென்ஸ் திரில்லராக வடிவமைத்துள்ள புதுமுக இயக்குனர் சுப்ரமணியன் ரமேஷ்குமாரை பாராட்டத்தக்கது.