‘இட்லி கடை’ படம் ஒரு சின்ன கிராமத்தில் தொழில் பக்தியுடன் இட்லி கடை நடத்தும் அப்பாவின் கதையை மையமாகக் கொண்டு நகர்கிறது. அந்த இட்லியின் ருசிக்கு ஊரே அடிமையாக இருக்க, வெளிநாட்டில் நல்ல சம்பளத்தில் வேலை செய்யும் மகன் ஒரு கட்டத்தில் சொந்த ஊர் திரும்பி அப்பாவின் கடையை கையில் எடுக்கிறார். அவர் ஏன் திரும்புகிறார், அப்பாவைப் போலவே மகனாலும் கடையை வெற்றிகரமாக நடத்த முடியுமா, அவர் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதை எமோஷனலாகச் சொல்லித் தருகிறார் இயக்குநரும், ஹீரோவுமான தனுஷ். அப்பாவாக ராஜ்கிரண் சிறப்பாக நடித்துள்ளார்.

முழுக் கதையும் பத்து பேர் கூட அமர்ந்து சாப்பிட முடியாத அந்தச் சின்ன இட்லி கடையைச் சுற்றியே நகர்கிறது. கோடை விடுமுறையில் சொந்த ஊரில் சாப்பிட்ட ஒரு இட்லி கடையை நினைவுகூர்ந்து கற்பனையுடன் கதையை உருவாக்கியதாக டைட்டில் கார்டிலேயே இயக்குநர் தனுஷ் தெரிவிக்கிறார். அதனால் இது அவரின் சொந்த அனுபவம் கலந்த கதை என்பது தெளிவாகிறது.
ராஜ்கிரண், நம் ஊரில் பார்க்கும் ஓட்டல்காரர்களை நினைவுபடுத்தும் வகையில், காலையில் மூன்று மணிக்கே எழுந்து கடையைத் திறந்து, மாவு அரைத்து, நல்ல உணவை தரும் தொழில் பக்தியை வெளிப்படுத்துகிறார். அவர் பாசிட்டிவ் கேரக்டரையும் இயல்பாக உயிரோட்டத்துடன் காட்டுகிறார். மனைவியாக வரும் கீதா கைலாசம் பாசக்கார அம்மாவாக மனதில் நிற்கிறார். சிறிய வயது ராஜ்கிரணாக வரும் தமிழ், பிரிகிடா ஜோடியின் காட்சிகளும் மனதைத் தொட்டுச் செல்கின்றன.
தனுஷ் இயக்கி, நடித்திருப்பதால், அதிக ஹீரோயிசம், பில்ட்அப், பாடல், பைட் எல்லாம் இருக்கும் என நினைக்கலாம். ஆனால் அவர் நடித்த முருகன் என்ற பாத்திரத்தில் தேவையானதை மட்டும் செய்து, இயல்பாக அமைதியாக நடித்திருக்கிறார். பாசக் காட்சிகள், காதல் காட்சிகள், எமோஷனல் சீன்களில் பெரிய ஹீரோ என்ற உணர்வை மறந்து இயல்பாக நடித்தது படத்துக்கு பலம் சேர்த்துள்ளது. வில்லனாக அருண்விஜய் ஸ்டைலாக தோன்றினாலும், அவரது இயல்பான இமேஜ் இந்தக் கதாபாத்திரத்துக்கு பொருந்தவில்லை. தனுஷ்–அருண்விஜய் போட்டியும் சண்டைகளும் மிகுந்த தீவிரத்தை தரவில்லை. இதனால் “அருண்விஜய்தானா வேண்டியது? புதுமுக வில்லன் ஒருவரை வைத்து இருக்கலாமே?” என்ற கேள்வி எழுகிறது. ஆனால் கிளைமாக்ஸ் பனிஷ்மென்ட் புதுமையாக அமைந்துள்ளது.
ஜி.வி. பிரகாஷின் “என்ன சுகம்” பாடல் மெலோடியாக ஈர்க்க, “என் பாட்டன் சாமி” பாடல் கதைமாந்திரத்துடன் உயிரோட்டமாக அமைகிறது. பின்னணி இசை சாதாரணமாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது. கிரண் கவுசிக் ஒளிப்பதிவில் தேனி கிராம அழகும், இட்லி கடை காட்சிகளும், பாடல்களும் அழகாக காட்சியளிக்கின்றன. குலதெய்வக் கோவில் மகிமை, காந்தியின் அகிம்சை கொள்கை, ராஜ்கிரண் சம்பந்தமான பாசிட்டிவ் சீன்கள், அப்பா–மகன் பாசம், சிறிய தொழிலாக இருந்தாலும் பக்தியுடனும் நேர்த்தியுடனும் செய்ய வேண்டிய அவசியம் போன்ற அம்சங்களில் இயக்குநர் தனுஷின் திறமைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது.மொத்தத்தில், இட்லி கடை படம் எளிமையான கதை, எமோஷனல் பாசம், கிராமத்து வாசனை, அப்பா–மகன் உறவின் உணர்ச்சி ஆகியவற்றை இட்லி மாவைப் போல கலந்து, இயல்பாக சுவைக்க வைக்கிறது.