செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் வட்டிக்கு பணம் கொடுத்து வருமானம் ஈட்டும் தாதாக்களாக கதை தொடங்குகிறது. இவர்களின் ஈகோவும் தொழில்போட்டியும் காரணமாக நண்பர்களாக இருக்கும் கபடி வீரர்களான ஷேன் நிகாம், சாந்தனுவும் சிக்கிக் கொள்கிறார்கள். பணத்தேவைக்காக அவர்கள் செல்வராகவனின் அணியில் சேர, ரத்த கபடியை ஆட வைக்கிறார் செல்வராகவன். இந்த விளையாட்டு எதற்காக? யார் வெற்றி பெறுகிறார்கள்? என்பதே கதை மையம். தமிழகம்–கேரளா எல்லைப் பகுதியான பாலக்காடு பின்னணியில் கதை நகர்கிறது. மலையாளத்தில் வெளியான இப்படம் தமிழிலும் டப்பாகி வெளியிடப்பட்டுள்ளது.

படம் கில்லி பாணியில் கபடி விளையாட்டுடன் தொடங்கி, விரைவில் கதை வட்டி தொழிலில் இருக்கும் மிரட்டல், சண்டை பக்கத்துக்கு நகர்கிறது. வட்டி கட்டாதவர்களை நிர்வாணமாக மிரட்டும் வில்லனாக அறிமுகமாகும் செல்வராகவன், அமைதியாக பேசிக்கொண்டு திடீரென அச்சுறுத்தும் காட்சிகளில் தாக்கம் செலுத்துகிறார். தொழில் போட்டியாளராக வரும் அல்போன்ஸ் புத்திரனும், அரசியல் கலக்கத்தில் ஈடுபடும் பூர்ணிமாவும் கதையை நகர்த்துகிறார்கள். ஹீரோக்களான ஷேன், சாந்தனுவும் இவர்களுக்குள் சிக்கி போராடுவதை மையமாக கொண்டு திரைக்கதை அமைகிறது.
ஷேன் நிகாம் கபடி வீரராக ஸ்டைலாக களம் இறங்கி, ஆக்ஷன் சீன்கள், குறிப்பாக ஓட்டல் பைட், அல்போன்ஸ் ஏரியா பைட், கிளைமாக்ஸ் பைட் ஆகியவற்றில் ரசிக்க வைக்கிறார். தமிழிலும் ரசிகர்கள் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கை தருகிறார். அவருடன் நண்பராக வரும் சாந்தனுவும் பைட் சீன்களிலும் கபடி காட்சிகளிலும் கலக்கி, கிளைமாக்ஸில் அவரது கதாபாத்திர மாற்றம் மனதில் நிற்கும் விதமாக உள்ளது.
செல்வராகவன் ரத்த தாண்டவம் ஆடும் கிளைமாக்ஸ் சண்டை அவரது வில்லன் உருவத்தை வலுப்படுத்துகிறது. அல்போன்ஸ் புத்திரன் வில்லனாக தாக்கம் செய்தாலும், பூர்ணிமாவின் கதாபாத்திரம் எதிர்பார்த்தளவில் நினைவில் நிற்கவில்லை. ஹீரோயினாக வரும் ப்ரீத்தி அஸ்ராணிக்கு அதிக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், கிடைத்த காட்சிகளில், குறிப்பாக பாடல் சீனில் கியூட்டாக பிரபலமாகிறார். பாலக்காடு பகுதி பின்னணியில் கதை நகர்ந்தாலும், கேரளாவின் இயல்பான டச்சிங் குறைவாக, பல நேரங்களில் தமிழ் படம் பார்ப்பது போலவே உணர்வு தருகிறது. அலெக்ஸ் கேமரா கபடி, சண்டை காட்சிகளை இயல்பாக கையாள, சாய் அபயங்கரின் “ஜாலக்காரி” பாடல் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. பின்னணி இசையில் சில புதுமைகள் இருந்தாலும், சில இடங்களில் சரியாக அமையவில்லை.
முதல்பாதியில் கபடி, சண்டை காட்சிகள் வேகமாக நகர, இடைவேளைக்குப் பிறகு கதை சற்று மந்தமாகிறது. போலீஸ் செயல்பாடுகள் குறித்த கேள்விகள், கதையில் தர்க்கம் குறைபாடு, கிளைமாக்ஸில் வலிமை குறைவு ஆகியவை குறைகளாக தெரிகின்றன. இரண்டாம் பாகத்தை முன்னிட்டு முடிக்கப்பட்டதால் சில கேள்விகள் விடை பெறவில்லை. மொத்தத்தில், நட்பு, துரோகம், கபடி, ஆக்ஷன், வட்டி தொழில், சண்டை அனைத்தையும் கலந்த இப்படம் மலையாளப்படமாக இருந்தாலும், தமிழ் பட சாயலை அதிகமாகக் கொண்டுள்ளது.