2022-ம் ஆண்டு, நடிகர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்தார். இதில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் பணியாற்றியிருந்தார். தேசத்துரோகி என்ற முத்திரை குத்தப்பட்ட ஒரு உளவாளி, உண்மையில் தேசநலனுக்காக எவ்வளவு பெரிய தியாகங்களை செய்கிறார் என்பதே இப்படத்தின் கதை. மேலும், இப்படத்தில் கார்த்தி, அப்பா-மகன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக, பி.எஸ். மித்ரன் – கார்த்தி கூட்டணியில் ‘சர்தார் 2’ திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இதில் எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு பணிகளை ஜார்ஜ் வில்லியம்ஸ் மேற்கொள்கிறார், படத்தொகுப்பு பணிகளை விஜய் கவனிக்கிறார். மேலும், இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மைசூரில் ‘சர்தார் 2’ படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, நடிகர் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், படக்குழுவினர் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி, சென்னை திரும்பியுள்ளனர். காலில் வீக்கம் ஏற்பட்டிருப்பதால், ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.