லவ் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில், ‛பாகமதி’, ‛துர்காமதி’ போன்ற படங்களை இயக்கிய ஜி.அசோக் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‛உப் யே சியாபா’ நாளை (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்துக்கு இசை அமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். சோஹம் ஷா, நுஷ்ரத் பருச்சா, நோரா பதேஹி, ஓம்கார் கபூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நகைச்சுவைத் த்ரில்லர் வகையில் படம் உருவாகியுள்ளது, இதில் ஒரு வித்தியாசமான அம்சம் உள்ளது.

அது என்னவென்றால், இந்த படத்தில் ஒன்றும் வசனங்கள் இல்லை. கதைமாந்தர்கள் பேசாமல், முழுக்க நகைச்சுவையும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் மட்டுமே கதை சொல்லும் கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்திய சினிமாவில் அரிதான முயற்சியாகக் கருதப்படுகிறது.
இந்தப் படத்தைப் பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில், “இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்குப் பெரும் சவாலாகவும், சுதந்திரமான அனுபவமாகவும் இருந்தது. பொதுவாக சினிமாவில் வசனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது; இசை ஒரு படி பின்வாங்குகிறது. ஆனால் இங்கே, இசையே கதையின் ஒரு பகுதியாக உள்ளது. குறிப்பாக நகைச்சுவை-த்ரில்லர் பாணியில் இசையை இணைப்பது புதிய அனுபவமாகவும் சவாலாகவும் இருந்தது. லவ் ரஞ்சன் மற்றும் இயக்குனர் ஜி.அசோக்குடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது,” என்று தெரிவித்துள்ளார்.