இந்திய திரையுலகம் மட்டுமின்றி இசை உலகமே வியக்கும் இசைஞானி இளையராஜா திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்துள்ளார். மேலும் லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியால் தமிழகத்திற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர். இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் அவருக்கான பாராட்டு விழா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (செப்டம்பர் 13) ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்’ இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பல்வேறு அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாசர், சத்யராஜ், பிரபு, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, கங்கை அமரன் உள்ளிட்ட இளையராஜா குடும்பத்தினரும் பங்கேற்றனர்.
விழாவில், இளையராஜாவின் இசைக்குழுவின் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. முதலில் ‛அமுதே தமிழே…’ என்ற பாடலை இளையராஜா தானும், அவரது குழுவினரும் இணைந்து பாடினர். தொடர்ந்து ‛ராக்கம்மா கைய தட்டு…’, ‛செந்தூரப்பூவே…’, ‛அந்தி மழை பொழிகிறது…’, ‛சின்னத்தாய் அவள்…’ போன்ற பல பாடல்கள் மேடையில் பாடப்பட்டன. இசை நிகழ்ச்சியை ரசித்த மக்கள், இளையராஜாவின் இன்னிசை மழையில் நனைய, பெரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். மேலும் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இசைஞானி இளையராஜா பெயரில் இசை கலைஞர்களுக்கு விருது வழங்கப்படும் என்றார். இசைஞானி இளையராஜாவுக்கு நினைவு பரிசையும் அவர் வழங்கினார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மேடையில் பாடப்பட்ட அனைத்து பாடல்களையும் முதல்வர் ஸ்டாலின் தேர்வு செய்ததாக விழாவில் கமல் தெரிவித்தார்.