நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து உருவாக்கிய படம் ‘கூலி’. அனிருத் இசையமைத்த இந்தப் படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், சிறப்பு தோற்றத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆனால், இந்தப் படத்தில் நடித்தது தான் ஒரு மிகப்பெரிய தவறு என அமீர்கான் கூறியதாக தகவல்கள் உலாவருகின்றன.. “ரஜினி சாருக்காக ‘கூலி’ படத்தில் கேமியோ கதாபாத்திரத்தை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரம் என்னவென்று எனக்கே தெளிவாகப் புரியவில்லை. ஒரு காட்சியில் வந்து, ஒரு அல்லது இரண்டு வசனங்களைப் பேசி மறைந்து விட்டேன். அதற்கென எந்த நோக்கமும் இல்லை. என் கதாபாத்திரம் மிக மோசமாக எழுதப்பட்டிருந்தது.
இது ஒரு வேடிக்கையான தோற்றமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அது சரியாகச் செயல்படவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. இப்படத்திற்கு இவ்வளவு பெரிய எதிர்வினை வரும் என்று எதிர்பார்க்கவில்லை. ‘கூலி’ படத்தில் நான் நடித்தது மிகப்பெரிய தவறு. இனி எதிர்காலத்தில் இப்படிப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருப்பேன்” என அவர் கூறியதாக தகவல்கள் பரவி வருகின்றன.ஆனால், இவையனைத்தும் வெறும் வதந்தி மற்றும் போலியான செய்திகள் என கூறப்படுகிறது.