தயாரிப்பாளர் கௌரவ் திங்கரா தயாரிப்பில், இயக்குநர் கரண் தேஜ்பால் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஸ்டோலன்’. இந்தக் கதையில், வடமாநில ரயில் நிலையத்தில் தனது சகோதரருடன் இருந்த கதாநாயகனாக நடிகர் அபிஷேக் பானர்ஜி நடித்துள்ளார். அப்போது ஒரு குழந்தை காணாமல் போகிறது.

அவர்களே அந்த சம்பவத்தின் பிரதான சாட்சிகள் என்பதால், குழந்தையைத் தேடும் கதாநாயகனும், குழந்தையின் தாயும் மேற்கொள்ளும் தேடுதலாக இந்த படம் அமைந்துள்ளது. 1 மணி 30 நிமிடங்களுக்கு அமைந்த இப்படம் 2023ஆம் ஆண்டிலேயே தயாரானது. எனினும், திரையரங்குகளில் வெளியிடப்படாமல், பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பெரும் வரவேற்பைப் பெற்றது.
படத்திற்கு கிடைத்த சிறப்பான வரவேற்பை தொடர்ந்து, அமேசான் பிரைம் நிறுவனம் அதன் ஓடிடி உரிமையை பெற்றுப், கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியிட்டது. ஓடிடியில் வந்த பின்னர் இது மிகுந்த பாராட்டுகளை பெற்றுவருகிறது.இது வெறும் குழந்தை கடத்தல் சம்பந்தப்பட்ட கதையாக இல்லாமல், பெண் குழந்தைகளை எதிர்கொள்ளும் சுரண்டல் நிலைகளை பற்றி பேசுவதால், விமர்சகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், ‘ஸ்டோலன்’ திரைப்படத்தை பார்த்த நடிகர் கமல், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.