தமிழ் திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் கார்த்தி. காதல், ஆக்சன் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படங்களில் பலவற்றில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இதன் பிறகு, கார்த்தி, இயக்குனர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார், இது விரைவில் வெளியாக உள்ளது. இப்போது, ‘சார்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில், ‘டாணாக்காரன்’ பட இயக்குனர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் கார்த்தியின் 29-வது படமாகும். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிகமாக ‘கார்த்தி 29’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான இந்த பட அறிவிப்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், ‘கார்த்தி 29’ படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படம் கடல் பின்னணியில் நடக்கும் ஆக்சன் மற்றும் கிரைம் கலந்த ஒரு வெறித்தனமான கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்படுகிறது.இந்நிலையில், ‘கார்த்தி 29’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக்சன் சார்ந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.