தமிழில் 2017-ம் ஆண்டு நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான படம் “மரகத நாணயம்”. ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கிய இந்த படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது ஒரு பேண்டஸி காமெடி திரைப்படமாக, நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மன்னன் இரும்பொறையின் மரகத நாணயத்தைப் பற்றிய கதையை நகைச்சுவையாக எடுத்து கூறியது. கதையின் இறுதியில் அந்த மரகத நாணயத்தை கைப்பற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மையக் கரு.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை தயாரித்த “ஆக்சஸ் பிலிம் பேக்டரி” இதன் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் ஹீரோ, ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி இருவரும் “மரகத நாணயம் 2” படத்தில் மீண்டும் இணைவார்கள் என பல தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், நடிகர் சத்யராஜ் இப்படத்தில் “இரும்பொறை மன்னன்” கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.