டெல்லியில் நடைபெற்ற தனியார் நிறுவனத்தின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு ‘இந்தியன் ஆஃப் தி இயர்’ விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக்கொண்ட தனுஷ் தனது பயணம் குறித்தும், மகன்கள் மீதான அன்பு குறித்தும் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
அப்போது பேசிய அவர், “நான் ஒரு சமையல்காரராக வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால், தற்செயலாக நடிகனாகிவிட்டேன். தற்போது என் வாழ்க்கையில் என்ன நடந்துகொண்டிருக்கிறதோ, என் வழியில் எது வந்தாலும், அதற்குக் காரணம் முற்றிலும் என் பெற்றோரின் பிரார்த்தனைகள், ரசிகர்களின் ஆதரவு மற்றும் மகாதேவனின் ஆசீர்வாதங்கள்தான். இதற்காக நான் எந்தப் பெருமையும் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், ஒரு பெரிய வடிவமைப்பில் நான் வெறும் கருவி மட்டுமே.
நான் எதைச் செய்தாலும், அதைப் பார்த்து எனது இரண்டு மகன்களும் பெருமைப்பட வேண்டும் என்பதற்காகத்தான் செய்கிறேன். அதேபோல், எதிர்காலத்தில் அவர்களை நினைத்து நானும் பெருமைப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். என் மகன்களை மிகவும் நேசிக்கிறேன் என்று சொல்வது சாதாரணமான ஒன்றுதான். ஏனெனில், ஒவ்வொரு தந்தையும் தனது குழந்தைகளை நேசிப்பார். ஆனால், என் வாழ்க்கையில் இந்த இரண்டு மகன்களும்தான் மிகவும் முக்கியமானவர்கள்” என்று தெரிவித்தார்.
