கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மிஷ்கின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘சத்யவான் சாவித்திரி’. பிரவீன் இயக்கியுள்ள இப்படம் நாளை நவம்பர் 20-ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. சென்னையில் நடைபெற்ற படத்தின் நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் படக்குழுவினருடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், இயக்குநர் பிரவீனை ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இருந்தே தெரியும் என்றும், நீண்ட காலமாக இந்தக் கதையைப் பற்றி அவர் தன்னிடம் பேசி வந்ததாகவும் தெரிவித்தார். பிரவீன் எப்போதும் சுறுசுறுப்பாகச் சுற்றிக்கொண்டே இருப்பார் என்றும், அவரை உட்கார வைக்க முயற்சி செய்து இறுதியில் தானே சோர்ந்துவிட்டதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
மிஷ்கினுடன் முதல் நாள் பணியாற்றும்போது பயமாக இருந்ததாகவும், இரண்டு நாட்களிலேயே அவருடன் நெருக்கமாகிவிட்டதாகவும் கூறினார். தனது மகளின் புகைப்படத்தைக் காட்டி உரையாடலைத் தொடங்கிய மிஷ்கின், பின்னர் சினிமா உள்ளிட்ட பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவித்தார். மனதில் பட்டதை ஒளிவுமறைவின்றிப் பேசும் அவர், சிறந்த நடிகர் மற்றும் இயக்குநர் மட்டுமல்லாமல் மிகச் சிறந்த மனிதரும் கூட என்று பாராட்டினார்.
மேலும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’ திரைப்படத்தைப் பாராட்டிய கீர்த்தி சுரேஷ், LGBTQ சமூகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் பெருமைப்படத்தக்க படைப்பு என்றும் தெரிவித்தார். சமூக வலைதளங்களில் படத்தைப் பற்றிய விமர்சனங்களும் ரீல்ஸ்களும் அதிகம் வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார்.நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷுக்கு ‘நடிகையர் திலகம்’ என்ற பட்டத்தை வழங்கிய மிஷ்கின், ‘டோரதி’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு மோதிரம் ஒன்றையும் பரிசளித்தார்.
