‘கூரன்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், கடந்த 45 ஆண்டுகளாக திரை உலகில் தயாரிப்பாளர், இயக்குநர் என செயல்பட்டு வருவதாகவும், தற்போது நடிகராகவும் பயணித்து வருவதாகவும் கூறினார். சினிமாவை விட்டு ஓய்வெடுக்க நினைத்தாலும் அது முடிவதில்லை என்றும், சினிமா காற்றைப் போல எப்போதும் சுவாசித்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

‘கூரன்’ படத்தில் நடித்த அனுபவம் தனித்துவமானது என்றும், குறிப்பாக ஒரு நாயுடன் இணைந்து நடித்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்ததாகவும் கூறினார். மனிதனுக்கும் நாய்க்கும் இடையிலான பாசத்தை மையமாகக் கொண்ட இந்தப் படத்திற்காக சிறந்த நடிகர் விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.
பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா மற்றும் பீப்பிள் பார் அனிமல்ஸ் அமைப்புகள் இணைந்து வழங்கும் ‘சினிகைண்ட்’ விருது கோல்கட்டாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டதாகவும், மனைவியுடன் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறினார். நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் உழைத்தால் சினிமா அங்கீகாரத்தைத் தரும் என்பதற்கு இது ஒரு உதாரணம் எனவும் தெரிவித்தார்.
