முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் ‘இருளன்’. அருண் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் பழங்குடியினத்தைச் சேர்ந்த கதாபாத்திரத்திலும், நவீன தோற்றத்திலும் அருண் விஜய் இடம்பெற்றுள்ளார்.
இப்படம் தைத்திங்களில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே பொங்கல் வெளியீட்டுக்காக அருள்நிதியின் ‘டிமான்டி காலனி 3’, விஜய் சேதுபதியின் ‘பாக்கெட் நாவல்’, விஜே சித்துவின் ‘டயங்கரம்’, பிரபுதேவாவின் ‘மூன்வாக்’, பா. ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ மற்றும் அஜித்தின் கார் ரேஸ் படமான ‘கிளாடியேட்டர்’ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன.
இந்தப் படங்களுடன் ‘இருளன்’ படமும் போட்டியில் இணையுமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், படக்குழு பொங்கல் வெளியீடு என நேரடியாக அறிவிக்காமல் தைத்திங்களில் வெளியாகும் என்று தெரிவித்திருப்பதால், பொங்கலுக்குப் பிறகும் படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
