நடிகை ரேணு தேசாய், 2000ஆம் ஆண்டு பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளியான பத்ரி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதே ஆண்டில் பார்த்திபன், பிரபுதேவா இணைந்து நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தின் வாயிலாகத் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 2003ஆம் ஆண்டு பவன் கல்யாண் இயக்கி நடித்த ஜானி திரைப்படத்தில் நடித்தார். அதன்பிறகு சினிமாவில் இருந்து விலகிய அவர், பவன் கல்யாணுடன் இணைந்து வாழத் தொடங்கினார். இருவரும் 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2011ஆம் ஆண்டு பிரிந்தனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2023ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான டைகர் நாகேஸ்வர ராவ் மூலம் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் ரேணு தேசாய். தற்போது 26 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தில் மம்மூட்டியின் மனைவியாக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் தனது மகளுடன் கலந்துகொண்ட ரேணு தேசாய், படத்தில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பு குறித்தும் சக நடிகர்களுடனான அனுபவங்கள் குறித்தும் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “இந்தப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்ததை இறைவனின் விருப்பமாகவே பார்க்கிறேன். கடந்த பிப்ரவரி மாதம் மகாசிவராத்தி அன்று அஸ்ஸாமில் உள்ள காமாக்யா தேவி கோயிலுக்குச் சென்றிருந்தேன். அந்தப் பயணத்தின்போதுதான் இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. மகாசிவராத்திரி, காமாக்யா தேவி கோயில், படத்தின் தலைப்பான ‘ஓம்’ என இவை அனைத்துக்கும் இடையே ஏதோ ஒரு தெய்வீகத் தொடர்பு இருப்பதாக எனக்குத் தோன்றியது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்னை நேரில் சந்திக்காமலேயே, எந்தவிதமான லுக் டெஸ்ட்டும் நடத்தாமலேயே இந்தக் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்தார். என் மீது அவர் வைத்த நம்பிக்கைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.
அதேபோல் மம்மூட்டியுடன் இணைந்து பணியாற்றிய பிறகுதான் ஒருவருடைய உண்மையான ஆளுமையும் உயரமும் என்ன என்பதைப் புரிந்துகொண்டேன். அவர் முன்னால் நின்று பேசுவதற்கே எனக்குப் பயமாக இருந்தது. அவரது நடிப்புத் திறமையையும் ஆளுமையையும் விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை.நவம்பர் 20ஆம் தேதி அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று படத்தைப் பார்த்துவிட்டு, எனது நடிப்பு குறித்த கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
