6 ஏக்கரில் பிரம்மாண்ட செட் … ‘கார்த்தி 30’ படத்தின் நியூ அப்டேட்!

நடிகர் கார்த்தி தற்போது ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் ‘மார்ஷல்’, தெலுங்கு இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்கத்தில் ‘கார்த்தி 30’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ‘மார்ஷல்’ படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், சத்யராஜ், லால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ராமேஸ்வரம் பகுதியில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் கார்த்தியின் பிறந்தநாளில் ஹைதராபாத்தில் ‘கார்த்தி 30’ படத்தின் பூஜை நடைபெற்றது. ‘மேட்’, ‘மேட் ஸ்கொயர்’, ‘டில்லு ஸ்கொயர்’ படங்களை இயக்கிய கல்யாண் சங்கர் இப்படத்தை இயக்குகிறார். பூஜை முடிந்த சில நாட்களிலேயே படப்பிடிப்பும் தொடங்கியது. இதில் மீனாட்சி சௌத்ரி, யோகிபாபு, ஜெயராம் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இப்படத்திற்காக ஆறு ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட வீடு ஒன்றின் செட் அமைக்கப்பட்டு வருகிறது. கதையில் முக்கிய இடம் பெறும் இந்த வீட்டில் பல முக்கியமான காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். செட் அமைக்கும் பணிகள் காரணமாகவே தற்போது படப்பிடிப்புக்கு இடைவேளை விடப்பட்டுள்ளது. பணிகள் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்கவும், கோடை விடுமுறையில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ‘மார்ஷல்’ படத்திற்காக ராமேஸ்வரத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. டிசம்பரில் அந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் கார்த்தி பங்கேற்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Add a Comment

Leave a Reply