‘ராமாயணம்’ படத்தின் கதையைவிட பட்ஜெட் பற்றியே பேசுவது ஏன்? – சல்மான் கான் கேள்வி!

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் தயாராகி வருகிறது நிதேஷ் திவாரியின் ‘ராமாயணம்’. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.4,000 கோடி எனக் கூறப்படுவதால், அதன் தயாரிப்புச் செலவு குறித்த விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், ‘ராமாயணம்’ படத்தைப் பற்றிய விவாதங்கள் எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பது குறித்து நடிகர் சல்மான் கான் தனது கருத்தை முன்வைத்துள்ளார். தனது அடுத்த படமான ‘மாத்ருபூமி: மே வார் ரெஸ்ட் இன் பீஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

அப்போது, “ராமாயணம் பற்றிப் பேசும்போது அதன் கதையையும், ராமர், ராவணன், சீதை போன்ற கதாபாத்திரங்களையும் மையமாக வைத்துப் பேச வேண்டும். ரூ.4,000 கோடி பட்ஜெட், விஷுவல் எஃபெக்ட்ஸ் பற்றியே தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பது சரியல்ல” என்று சல்மான் கான் தெரிவித்தார்.

படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை விட அதன் பிரம்மாண்டம் குறித்த பேச்சுகளே அதிகமாக இருக்கும் நிலையில், சல்மானின் இந்தக் கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

Add a Comment

Leave a Reply