தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறாரா மானசா வாரணாசி? வெளியான புது தகவல்!

மிஸ் இந்தியா பட்டம் மூலம் புகழ்பெற்ற மானசா வாரணாசி, தற்போது தமிழ் சினிமாவில் தனது பயணத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறார். ஐதராபாத்தைச் சேர்ந்த இவர், 2020-ம் ஆண்டு நடைபெற்ற பெமினா மிஸ் இந்தியா போட்டியில் வெற்றி பெற்று நாடு முழுவதும் கவனம் பெற்றார். அதற்கு முன்பு நிதித் தகவல் பகுப்பாய்வாளராகப் பணியாற்றிய மானசா, பின்னர் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் திரைத்துறைக்குள் நுழைந்தார்.

2024-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படமான ‘தேவகி நந்தனா வாசுதேவா’ மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து, சமீபத்தில் வெளியான ‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்படமும் அவருக்கு ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து தெலுங்குத் திரையுலகில் புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அவர், தற்போது தமிழ் படங்களிலும் நடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த வகையில், இரண்டு தமிழ் படங்களுக்கான கதைகளை மானசா கேட்டுள்ளதாகவும், அவற்றில் ஒரு படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிப்பது குறித்துப் பேசிய அவர், “தென்னிந்திய சினிமாவில் நடிப்பது என்பது அலாதியானது. புதிய கதைகளைக் கேட்டு வருகிறேன். நிச்சயம் நல்ல தகவல்களைச் சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பதில், தமிழ் படங்களில் அவர் அறிமுகமாவது குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, இயக்குநர் ஸ்ரீனு வைட்லா இயக்கத்தில் சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘ஜார்ஜ் கிரிஷ்’ படத்திலும் மானசா நடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் படங்களில் அவர் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பதை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Add a Comment

Leave a Reply