கடந்த 2020-ம் ஆண்டு நடுத்தரக் குடும்பம் ஒன்றில் உண்மையாக நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, சஸ்பென்ஸ் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பேமிலி பாய்’. ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மிதுன் மாணிக்கம், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘பேமிலி பாய்’. இப்படத்தை அவரே இயக்கியும் நடித்தும் உள்ளார்.
தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கதையின் முக்கியமான மர்மத்தை வெளிப்படுத்தாமல் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. “சிலப்பதிகாரத்துல தொடங்கி சிங்கார சென்னை வரைக்கும், ஒரு பொருள் தொலையும் போது… அத தொலச்சவனுக்குத்தான் அதோட வலி புரியும்…” என்ற வசனத்துடன் தொடங்கும் டீசர், ஒரு பொருள் இழப்பைச் சுற்றியுள்ள உணர்வுகளையும் சம்பவங்களையும் மையப்படுத்தும் கதையாக இப்படம் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.
இப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுக்கிரகா எஸ். நம்பியார், நிகிலா ஷங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் கே. கதிரவன் ஒளிப்பதிவு செய்ய, ஜே.பி. நிர்மல் இசையமைத்துள்ளார். குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக உருவாகியுள்ள இதனை மெக்கானிக் பிக்சர்ஸ் மற்றும் மில்லினியல்ஸ் மூவி புரொடக்ஷன் எல்எல்பி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ‘பேமிலி பாய்’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
