நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான வைபவ், ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’ உள்ளிட்ட படங்களில் தனது நடிப்பால் கவனம் பெற்றார். பின்னர் ‘கப்பல்’ படத்தில் கதாநாயகனாக நடித்த அவர், பிரியா பவானி சங்கருடன் இணைந்து நடித்த ‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் மேலும் பிரபலமானார். 2017-ல் வெளியான அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஐயப்பனை மையமாகக் கொண்டு உருவாகும் ‘மணிகண்டா’ திரைப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்துள்ளார். மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். ‘மாளிகைப்புரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இப்படத்தை இயக்குகிறார். தாந்த்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு கிரியேட்டிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார். பிரேம்ஜி இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வைபவ் ஐயப்பன் வேடத்தில் காட்சியளிப்பதுடன், ‘இறைவன் மற்றும் அவரது மக்களின் பயணம்’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. ஆன்மிகப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் பான் இந்தியா திரைப்படமாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
