மலையாளத் திரையுலகில் இளம் நடிகராகக் கவனம் பெற்றவர் நஸ்லென். ‘பிரேமலு’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இவர், தற்போது ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்க, நஸ்லென் ‘ஈஸ்வரன்’ என்ற கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இதுவரை காதல், நகைச்சுவை கதைகளில் நடித்துவந்த அவர், இப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற ‘சீன்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பேசிய நஸ்லென், தனது முதல் தமிழ்ப் படம் என்பதால் ஒருவித பதற்றம் இருப்பதாகத் தெரிவித்தார். அதேசமயம், சூர்யா, நஸ்ரியா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாகவும் கூறினார். மேலும், படத்தைப் பார்த்த பிறகு தனது நடிப்பில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைச் சுட்டிக்காட்டுமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். அந்தக் குறைகளைத் திருத்திக்கொள்ளத் தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
‘சீன்’ படத்தைப் பார்த்துவிட்டு, தான் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க வேண்டுமா அல்லது மலையாளத் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமா என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும் என்றும் நஸ்லென் குறிப்பிட்டார். அவரது வெளிப்படையான கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ‘சீன்’ திரைப்படம் அவருக்குத் தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெற்றுத் தருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
